சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை இணக்கமின்றி முடித்த இலங்கை அரசாங்கம்
இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள், தொடர்பாக பத்திரதாரர்களின் தற்காலிக வழிநடத்தல் குழுவின் ஒன்பது உறுப்பினர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை இணக்கமின்றி முடித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக கட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களான clifford chance மற்றும் Lazard ஆகியோர் முறையே இணைந்தனர்.
அதேநேரம், வையிட் அன்ட் கேஸ் (White & Case) மற்றும் ரோத்ஸ்சைல்ட் அன்ட் கொம்பனி (Rothschild & Co) ஆகிய பத்திரக்காரர்களின் வழிநடத்தல் குழுவும் இணைந்திருந்தன.
இதன்போது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இருந்தபோதிலும், மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்கு வருவதற்கு இரண்டு தரப்புக்களும் தவறிவிட்டன என்று இலங்கையின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நிதி வருவதைத் தக்கவைப்பதற்கு, கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் காண வேண்டிய இலங்கை அதிகாரிகளுக்கு இந்த பின்னடைவு, அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக ப்ளும்பேர்க் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய கட்டுப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்தவுடன் கட்டுப்படுத்தப்பட்ட விவாதங்களை நீடிப்பதற்கு பத்திரக்காரர்களின் வழிநடத்தல் குழு ஒப்புக் கொள்ளவில்லை என்று நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை, வழிநடத்தல் குழு மற்றும் அதன் ஆலோசகர்கள், லண்டனில் கடந்த மார்ச் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரண்டு நாள் அமர்வின் போது, கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றி விவாதித்தனர்.
கடன் மறுசீரமைப்புத் திட்டம்
கூட்டங்களுக்கு முன்னதாக, மார்ச் 25 அன்று, குழுவின் ஆலோசகர்களுக்கு இலங்கை தனது சொந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அனுப்பியிருந்தது எனினும் அது வழிநடத்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தை, அதன் பணிப்பாளர் சபை, மறுபரிசீலனை செய்வதற்கு முன்னதாக, அடுத்த சில வாரங்களில், இலங்கை அரசாங்கம், பத்திரகாரர்களுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டு 'பொதுநிலையை அடைய' எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏப்ரல் 3 ஆம் திகதியன்று பத்திரதாரர்கள் சமர்ப்பித்த குழுவின் திருத்தப்பட்ட கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம்; இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |