தொடர்ச்சியான போராட்டங்கள் சர்வதேசம் ஊடான தீர்வினை பெற்றுக்கொடுக்கும்: க.விஜிந்தன்
வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது தான் சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கின்ற அல்லது ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கின்ற முடிவிற்கு வரும் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு அழைப்பு
எதிர்வரும் 30 ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இதில் கட்சி பேதம் இன்றி மொழி பேதமின்றி பங்கேற்று போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கின்றது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதுதான் சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கின்ற அல்லது ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கின்ற முடிவிற்கு வரும்.

இலங்கை அரசாங்கம் இதற்கான தீர்வினை பெற்றுத்தராவிட்டாலும், சர்வதேசத்தின் அழுத்தம் ஊடாக நிதந்தர தீர்வினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலமைகள், உறவுகளின் போராட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் 2 ஆயிரம் கடந்து சென்றுள்ளது.
இதற்கு காரணம் காலத்திற்கு காலம் வருகின்ற ஆட்சியாளர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவதே ஆகும். ஆனால் உண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எண்ணில் அடங்காதவை.
ஒவ்வொரு நாளும் பல்வேறுபட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி கடந்து செல்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் அவர்களை அச்சுறுத்துவது விசாரணைக்கு அழைப்பது என்று பல்வேறுபட்ட துன்பகரமான நிலையில் நீதி கோரி போராடி வருகின்றார்கள்.
போராட்டத்திற்கு தீர்வு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்ல சமூகம் சார்ந்த ஒவ்வொருவரின் கடமையாக காணப்படுகின்றது. இன்று தங்கள் உறவுகளை தேடி போராடும் பெற்றோர்கள் பலர் இறந்து கொண்டு செல்கின்றார்கள்.
காலப்போக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உயிர்கள் பிரிந்தாலும் இதற்குரிய தீர்வு கிடைப்பதற்கான தெளிவான பொறிமுறை இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனை ஒரு முடிவிற்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் சகல தரப்பினரும் அவர்களுடன் கைகோர்த்து இந்த போராட்டத்தினை வலுச்சேர்க்க வேண்டும்.
இவர்கள் தொடர்ச்சியாக செய்கின்ற இந்த போராட்டங்களை சாதரணமாக பார்த்துக்கொள்ள முடியாது போராடங்களுக்கு வலுச்சேர்க்க அனைவரும் அணிதிரள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.