தமிழர்களுக்கு ஆதரவாக வெளியாகியுள்ள மற்றுமொரு சர்வதேச அறிக்கை
இலங்கையின் (Sri Lanka) உள்நாட்டுப் போரில் இறந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூரும் தமிழர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தி தடுத்து வைத்துள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச வழக்குகள் மற்றும் பிற பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை இன்று (23) வெளியாகியுள்ளது.
ஐஎம்எப் ஒப்பந்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை: லக்ஸமன் கிரியெல்ல
ஆசியப் பணிப்பாளர்
எனினும், இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் போரின் போது தமது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்துள்ளது.
இந்நிலையில் அது உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகங்களையும் மௌனமாக்க முயற்சிக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் ( Elaine Pearson) கூறியுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் சர்வதேச நடவடிக்கைகள் தேவை என்பதையே இந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நிறைவு தினத்திற்கு முன்னதாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை சீர்குலைக்க முயன்றனர்.
இதில் ஒரு கட்டமாக திருகோணமலையில் இறுதிப்போரின் முடிவில் பல பொதுமக்கள் உட்கொண்ட பட்டினிச் சூழலின் அடையாளமான கஞ்சியை வழங்கியதற்காக நான்கு பேரை ஏழு நாட்கள் காவலில் வைத்துள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம்
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரையும் ஏனையோர் நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுகளையும் அதிகாரிகள் பெற்றுள்ளனர்
சில இடங்களில் நிகழ்வுகள் தொடர்வதைத் தடுக்க அல்லது மக்கள் அவர்களைச் சென்றடைவதைத் தடுக்க பொலிஸார் தலையிட்டது போன்ற சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பட்டியலிட்டுள்ளது
இதேவேளை இலங்கையில் கடந்த காலங்களில் காணாமல் போகும் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் சீர்திருத்தம் அல்லது பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில் இந்த நடைமுறை பாதுகாப்புப் படைகளுக்குள் வேரூன்றி உள்ளது
இந்த ஆண்டு மார்ச் 14 அன்று, ஒரு நபரை இரகசிய காவலில் வைத்து அவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரங்களை விசாரிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுள்ளதை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது
அந்நியச் செலாவணி
இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அளவை ஒப்புக்கொள்வது, உடனடி மற்றும் நம்பகமான விசாரணைகளை மேற்கொள்வது, பாரிய புதைகுழிகளை விசாரிக்க சர்வதேச தொழில்நுட்ப உதவியை நாடுவது, சுதந்திரமான வாதாடும் அதிகாரத்தை நிறுவுவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சசட்டத்தை தடைசெய்வது என்பன அடங்குவதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் வெளிநாட்டு அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகளின் முகவர்களும் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் அனைத்து வகையான அந்நியச் செலாவணிகளையும் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சந்தேகத்துக்குரிய புதைகுழிகளை தோண்டியெடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு வெளிநாடுகளில் வழக்குத் தொடருதல் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கையர்களை கடுமையான சோதனை செய்தல் என்பன மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
இதற்கிடையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த துன்பத்தை ஏற்படுத்தும் செயல்களை கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பியர்சன் கண்டித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் செப்டெம்பர் அமர்வின்போது, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தின் ஆணையை புதுப்பிப்பதும், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம் என்றும் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பியர்சன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |