இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது! எச்சரிக்கை விடும் மகிந்தவின் மைத்துனர்
இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியம் ஒரு சதம் கூட வழங்காது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் தீவிரமடையும். இதனால் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலா பயணிகள்
சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் அந்நியச் செலாவணியை ஈட்டாவிட்டால், நாடு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவதே சுற்றுலா வணிகத்தில் முக்கிய விடயமாகும். இந்த நிலையில் மீண்டும் போராட்டங்களை ஏற்படுத்தி அமைதியை இல்லை என்பதனை உலகிற்கு தெரியப்படுத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் போய்விடும்.
அந்நிய செலவாணி
அடுத்து வரும் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளையும் அந்நிய செலாவணியையும் நாட்டிற்குக் கொண்டு வராவிட்டால் பெரும் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் என்பதை இந்தப் போராட்ட அலையை ஒழுங்கு செய்வோரும் பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நமக்கு தேவையான பொருட்கள் அந்த பணத்திலேயே கொண்டுவரப்படும். இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச நாணய நிதியம் ஒரு சதம் கூட வழங்காதென்பதே நான் கூறும் விடயத்தின் முக்கிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.