இலங்கைக்காக இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அனுமதி..
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்காக இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் அனுப்புவதற்கான தமது முயற்சிகள் தாமதமானதாக பாகிஸ்தான் முன்னதாக தெரிவித்திருந்தது.
இந்தியா மறுப்பு
நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் தங்களது விமானம் இந்திய வான்பரப்பைப் பயன்படுத்த இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளமையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை ஆதரவுடன், பாகிஸ்தான் ராணுவத்தின் 45 பேர் கொண்ட நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் C-130 ரக விமானத்தில் இலங்கைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.
எனினும், இந்த நடவடிக்கையை முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கை என்று பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்தும், இந்திய வான்பரப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த விமானப் பயணம் தடைபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வான்பரப்பு
மாற்று வழியில் பொருட்கள் இலங்கையைச் சென்றடைய சுமார் எட்டு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வான்பரப்பை மனிதாபிமான அடிப்படையில் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி பாகிஸ்தான் அரசாங்கம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தியாவிடம் விண்ணப்பமொன்றை சமர்ப்பித்தது.
இந்த நிலையில் குறித்த விண்ணப்பத்துக்கு மாலை 5:30 க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கோரிக்கையானது துரிதமாகவும், காலதாமதமின்றியும் வழங்கப்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.