சர்வதேச நீதி அவசியமில்லை! உள்நாட்டில் நியாயம் வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி முதலாவது அமைக்கப்பட்ட விஜித் மலல்கொட அறிக்கை முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அந்த அறிக்கையும் வெளிவரவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றது. அதில் அதிகாரிகள் சரிவர பொறுப்புக்களை செய்யவில்லை என்பது தெரியவந்ததோடு முன்னாள் அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டாலும் அதன் அறிக்கை வெளிவரவில்லை.
தற்போதைய அரசின் காவல்துறை அமைச்சர் சரத் வீரசேகர 40 பேருக்கு வழக்கு தாக்கல் செய்வதாக தெரிவித்தாலும், சிலர்மீது வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர இடமளிக்கமாட்டோம்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகளில் முதல் ஒரு இணைப்பு மட்டுமே கிடைத்தது. ஏனைய இணைப்புக்கள் இதுவரை கிடைக்கவில்லை. முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்கூட இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போது காவல்துறையில் உள்ள பிரதானி ஒருவர் கடந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நபர்களை கைது செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார். அவர் தற்போது காவல்துறையில் உயரதிகாரியாக உள்ளார்.
அப்படிப்பட்டவர்களை நாங்கள் என்றும் கொலைகாரர்களாகவே பார்க்கின்றோம். சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னால் அந்த இடத்தில் மீட்கப்பட்ட சடலங்களில் செய்யப்பட்ட மரபணுப் பரிசோதனைகளில் சாரா ஜெஸ்மின் இன்னும் உயிரிழக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை அறிவித்தார்கள். அதன் பின்னர் புதைக்கப்பட்ட சடலங்களை மீட்டு மீண்டும் பரிசோதனை செய்தார்கள்.
உண்மையில் அந்தச் செயற்பாடு கேலிக்குரியதாகும். குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போது, சாரா ஜெஸ்மினை மட்டக்களப்பிலிருந்து மன்னாருக்கு காவல்துறை அதிகாரியொருவர் அழைத்துச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இராணுவ புலனாய்வு அதிகாரி ஜெமீல் என்பவருடன் செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல் என்ன? மறைந்திருக்கின்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.
குறிப்பிடத்தக்க நபர்கள் மாத்திரமல்லாமல் இதற்குப் பின்னால் இன்னும் பலர் இருக்கின்றார்கள். அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருகின்றன, செல்கின்றன.
ஆனால் ஒருநாள் இதன் உண்மைகள் வெளிவரும். அப்போது அதனை மறைத்தவர்களுக்கு நீதி சரிசெய்யப்படும். 269 பேரது உயிர்கள் பறிபோயின.
சிலர் இன்னும்
அங்கவீனர்களாக உள்ளனர். இந்நிலையில் நீதி கிடைக்கும்வரை நாங்கள்
போராடுவோம். கால்துடைப்பானுக்கு கீழ் இந்த விசாரணைகளை
மூடிமறைக்க முடியாது என்பதோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும்.
போலியான அறிவிப்புகளுக்கு நாங்கள் மீண்டும் ஏமாறமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.