தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம்
வடகிழக்கில் தமிழர் “நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளருமான இருதயம் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தாயக செயலணி, சிவில் சமூக செயல்பாட்டாளர்களின் ஊடக சந்திப்பு இன்று (11.08.2025) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், "தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மனிதப் புதைகுழிகள்
செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள்மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே. குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இப்படுகொலைக்கு முன்னதாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும் அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் மிகக்கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கை அரசுப் படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999 ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.
ஆயினும், பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசியல் இயந்திரங்கள் அவற்றை முழுமையாக விசாரணை செய்யாமல், மூடி மறைத்து வந்தன. அண்மையில், அப்பகுதியில் கட்டுமான வேலைக்காக நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது மனித எலும்புக்கூடுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இவ்விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதைப் பற்றிய கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு போராட்டமாக தாயக மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, வரும் 23.08.2025 சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் தமிழர் தாயகமெங்கும் “நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் நடைபெறவுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



