தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தியிருந்தால் ஈஸ்டர் படுகொலை தடுக்கப்படிருக்கும்: சபா குகதாஸ்
2009 முள்ளிவாய்க்காலில் மிகக் கோரமாக நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற சந்தர்ப்பம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (09.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சர்வதேச விசாரணை
ஈஸ்டர் படுகொலைக்கான ஆதாரம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியாகிய பின்னர் நாடாளுமன்றத்தில் பல குரல்கள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மேலேழுந்தன.
இது ஒருவகையில் சிலரது அரசியல் உள் நோக்கமாக இருந்தாலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு தமிழர்களிடம் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் தென்னிலங்கையில்
கர்தினால் உட்பட தற்போது கதறும் தரப்புக்கள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
செய்கின்றனர்.
அன்று முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய அதே தரப்பினர் தான் ஈஸ்டர் படுகொலையை அரங்கேற்றினார்கள் என்பது தற்போது நிரூபணமாகி விட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
ஆகவே அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை மேற் கொண்டு நீதி வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறு படுகொலை நடந்திருக்க மாட்டாது.
எதிர்வரும் காலத்திலும் வேறு வடிவங்களில் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க இப்படியான நிகழ்வுகள் அரங்கேற்றப்படலாம்.
அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இன்று கூவும் தென்னிலங்கைத் தரப்புக்கள் முதலில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை கோருங்கள் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு தானாகவே நீதி கிடைக்கும் அத்துடன் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை கொன்றெழிக்கும் கலாசாரத்திற்கு அதனை மேற் கொள்ளும் சூத்திரதாரிகளின் செயற்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |