தேசபந்துவை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் யார்!
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டாரா என்ற கேள்வியை சிலத்தரப்புக்கள் அரசாங்கத்திடம் வினவியுள்ளன.
அவர் நீதிமன்ற கட்டளையை மீறி பல நாட்கள் வெளிவராமையை இது மேற்கோள் காட்டுகிறது.
தேசப்பந்துவை கைது செய்யுங்கள் என்ற நீதிமன்றின் பிடியானைக்கு பிறகு தலைமறைவான அவர், இறுதியாக நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
சட்டத்தரணிகள் குழு
விருந்தினர் ஒருவர் நிகழ்வுக்கு செல்வதை போன்ற உடை அணிந்து, பென்ஸ் ரக காரில் நீதிமன்றத்திற்கு வந்திறங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் தனியாக வரவில்லை. அவருக்கு ஆதரவாக நீதிமன்ற நுழைவாயிலில் பிரமாண்டமாக சட்டத்தரணிகள் குழுவினர் சூழ்ந்துள்ளனர்.
அவருக்கு ஆதரவாக கொழும்பிலிருந்து சென்ற 50 சட்டத்தரணிகள் குழு தேசபந்து மீதான பிடியானை வழக்குக்கு சவால் விட அங்கு சென்றுள்ளனர்.
அவர்களின் கட்டணங்களை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்கியிருக்கலாம் என நேற்று சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
தேசபந்துவை யார் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்?
தேசபந்து நேற்று நீதிமன்றில் முன்னிலையாவதற்கு முன்னர் விசாரணையும், நடவடிக்கைகளும் புதிராகவே காணப்பட்டன. எனினும், சிறையா? பிணையா? என அவருக்கான உத்தரவை எதிர்ப்பார்த்து நாடு காத்திருந்தபோது மாத்தறை நீதவான் நீதிமன்று அவரை ஒருநாள் விளக்கமறியளில் வைக்க உத்தரவிட்டது.
தென்னகோன் உடனடியாக ஒருநாள் காவலில் வைக்கப்பட்டார். அவரது சட்டப்பூர்வ உயிர்நாடி என்பது நீதவானின் உத்தரவை இடைநிறுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு.
முன்னதாக இது விசாரணைகள் இன்றி நிராகரிக்கப்பட்டது. இது தேசபந்து மீதான சட்டத்தின் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. எனினும் ரிட் மனுவின் காரணமாக நீதிமன்றின் நடவடிக்கை தொடர்பிலான சில கேள்விகளும் எழுந்திருந்தன.
இதற்கு காரணம், தற்போது நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கொலை சதித்திட்டத்தை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்கப்பட வேண்டுமா என்பதே.
தென்னகோன் மீது குற்றச்சாட்டு
துணை இராணுவக் குழு மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளைப் பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சொகுசு ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரும் இதில் உயிரிழந்தார். அவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்.
2023 புத்தாண்டு தினத்தன்று சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் இந்த நடவடிக்கை, உலகளவில் இலங்கை தொடர்பான நல்லென்னத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தது.
இந்தத் தாக்குதலுக்கு வெள்ளை வான் ஒன்றும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெலிகம பொலிஸ் அதிகாரிகள், ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் என்று கருதி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.
தென்னகோன் சரணடைவதற்கு முன்பு தனது “ரிட் மனுவுக்காகக் காத்திருந்தேன்" என்று வாதிட்டுள்ளார்.
இதன் காரணமாக சாட்சியங்களை சிதைக்கவும், சாட்சிகளை அச்சுறுத்தவும் பயன்படுத்தக்கூடிய ஆழமான பொலிஸ் மற்றும் அரசியல் தொடர்புகளைக் தேசபந்து கொண்டுள்ளாரா என்ற கேள்வி கடந்த நாட்களில் எழுப்பப்பட்டிருந்தது.
கொலைச் சதியில் ஈடுபட்ட ஒரு சாதாரண குடிமகன் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் பிடிபட்டால், அவருக்கு பிணை வழங்கப்படுமா? இல்லை..
ஆனால் தேசபந்து இதனையே செய்தார். பிணைக்காக காத்திருந்தார். அப்படியென்றால் உயர்மட்ட பின்னணியில் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்பட்டதா?
இதன்படி அவர் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டால், ஒருவேளை அது குற்றத்தை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இருக்கலாம்?
குற்றப் புலனாய்வுத் துறை
இங்கு தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், துப்பாக்கியையும், வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கிட்டத்தட்ட ஆயிரம் மதுபான போத்தல்களையும் குற்றப் புலனாய்வுத் துறை மீட்டுள்ளது.
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களின் பெறுமதி இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது.
அவ்வளவு அளவு மதுபானம் வைத்திருக்க அவருக்கு உரிமம் இல்லை. இதுவும் சட்டவிரோத செயலாகும். அவர் சட்டவிரோத மது கடத்தலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று அவர் நீதிமன்றில் முன்னிலையானபோது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் வாதங்களே இன்றைய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இருந்தது.
அது பின்வருமாறு அமைந்திருந்தது, “இவர் ஒரு குற்றவாளி – ஆனால் இவர் அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார், இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகத்தினர் போன்றவர்.
பிணை வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிற்கு பிணை வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களம் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் தென்னகோன் சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளிடமிருந்து மறைந்திருந்தார் என தெரிவித்துள்ளது.
பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர், மாத்தறை நீதிமன்றத்திற்கு கோர்ட்சூட் அணிந்து ஆடம்பர பென்ஸ் காரில் வந்தார் என எனக்கு தகவல் கிடைத்தது.
அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் அமர்ந்திருந்தார். இந்த தகவல் கிடைத்த பின்னரே நான் நீதிமன்றத்தில் முன்னிலையாக தீர்மானித்தேன்.
சந்தேகநபர் தான் ஒரு இரகசிய பூனை போல நீதிமன்றத்திற்குள் நுழைந்து, எங்களுக்கு தெரியப்படுத்தாமல் பிணையை பெறலாம் என நினைத்திருந்தார். நான் நீதிமன்றத்திற்கு வந்தவேளை அவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
கனம் நீதிபதி அவர்களே எப்படி அவருக்கு ஆசனம் வழங்கப்பட்டது. அவர் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டிருக்கவேண்டும். இவர் ஒரு குற்றவாளி. ஒரு குற்றவாளி அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைய கூடாது.
நீதிமன்ற உத்தரவு
அவர் நிலத்தில் தவழ வேண்டும். இவர் 20 நாட்கள் தனது தொலைபேசியை செயல் இழக்கச்செய்துவிட்டு, 20 நாட்கள் தலைமறைவாகியிருந்தார்.
இவருக்கும் மாகந்துரே மதுஸ் போன்ற திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிற்கும் வித்தியாசமில்லை.
இந்த சந்தேகநபர் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த காலத்தில் சட்டத்தரணிகள் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர் என தெரிவித்தவர்.
ஆனால் இன்று அவரே சட்டத்தரணிகள் புடைசூழ நீதிமன்றம் வந்துள்ளார். இது டபில்யூ 15 ஹோட்டல் தொடர்புபட்ட விடயம் மாத்திரமல்ல, இது கர்மாவின் நீதி. இவருக்கு கர்மா குறித்து விளங்கப்படுத்த தேவையில்லை அவரே அதனை அனுபவிக்கின்றார்” என்றார்.
இந்நிலையிலேயே இன்று இடம்பெற்ற வழக்கில் அவரை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து மறைந்திருந்த விவகாரம் இலங்கை சட்ட அமைப்பின் நேர்மை தொடர்பான விடயம்.
எனவே, தேசபந்து தென்னகோன் விடுவிக்கப்பட வேண்டுமா? அவர் சட்டத்தின் முழு சக்தியையும் எதிர்கொள்ள வேண்டுமா?
தேசபந்துவுக்கு ஆதரவாக சூழ்ந்துள்ள சட்டத்தரணிகளின் வாதங்களும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கைகளும் எவ்வாறு எதிரொலிக்க போகின்றது என்பதை பொறுத்திருந்தே நாம் பார்க்கவேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Dharu அவரால் எழுதப்பட்டு, 20 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
