அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐபிசி தமிழ் விருட்சமாகிய வரலாறு (Photo)
உலகில் வானொலி என உச்சரிக்க வைத்தவர், அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டவர் மார்க்கோனி. 1895ல் இது நடைபெற்றது. ஆயினும், 1920களில் தான் வானொலி ஒலிபரப்பு என்பது மக்கள் மயமானது. அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளிலேயே முதல் வானொலி நிலையங்கள் அமைந்தன.
1924ல் இலங்கைக்கும் வானொலி நிலையம் வரப்பெற்றது என்பது பெரும் ஆச்சரியத்துக்குரியது. தென்கிழக்காசியாவில் வானொலி நிலையத்தை அமைத்துக்கொண்ட பெருமைக்குரிய நாடாக இலங்கை திகழ்கின்றது. உத்தியோகபூர்வமான ஒலிபரப்பு 1925ல் நடைபெற்றதாக வரலாற்றுப் பதிவு கூறுகின்றது. மூன்று ஆண்டுகளில் இலங்கை வானொலி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப்போகின்றது.
அந்த நூற்றாண்டுக் காலகட்டத்தில் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ், ஒலி ஊடகம் 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது.
1997 ஜூன் 9ம் திகதி, பிரிட்டன் தலைநகர் லண்டனிலிருந்து உலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் குரலாக, ஒலியாகத் தொடங்கியது ஐபிசி தமிழ் வானொலி.
உலகில் எத்தகைய நவீனரக தொழில்நுட்ப சாதனங்கள் வந்தாலும் அவற்றுக்குள் உள்ளடங்கக் கூடியது வானொலி. வானொலி எவருக்கும் எந்த இடையூறும் செய்யாதது.
ஓரிடத்தில் அமர்ந்திருந்துதான் வானொலியைக் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீள் அலை (LW),சிற்றலை (SW),மத்திய அலை (MW), பண்பலை (FM) ஆகியவற்றில் ஒலிபரப்பாகும் வானொலி ஒலிபரப்புகள் ஓரிடத்தில் அமர்ந்திருந்து கேட்க வேண்டிய அவசியமற்றது.
ஆனால், ஐபிசி தமிழ் வானொலி செயற்கைக்கோள் (Sateilite) வழியாக ஆரம்பிக்கப்பட்டது.
வானொலித்துறை சார்ந்தவர்களே செயற்கைக்கோள் (Sateilite) வழியாக தமிழ் வானொலி ஒலிபரப்பு சாத்தியமா? என்ற வாதப்பிரதிவாதங்களை முன் வைத்திருந்தனர்.
நாடக ஆசான், ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் பீ.பீ.சி தமிழோசை வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் வீட்டில் ஓய்ந்திருக்காமல் ஊடகவானில் பறந்திட பல திட்டங்களை வகுத்தே 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்தார்.
முதல் ஒரு மாதம் முழுவதும் 24 மணி நேரமும் பண்பலை FM அலைவரிசையில் லண்டன் முழுவதும் ஐபிசி தமிழ் வானொலி ஒலிபரப்பாகியது. பிரிட்டன் தமிழ் மக்கள் இல்லங்களில் செயற்கைக்கோள் இணைப்புகள் மின்னல் வேகத்தில் ஏற்படுத்தப்பட்டன. செயற்கைக்கோள் (Sateilite) இணைப்புக்களை மேற்கொள்ளும் பலர் பணிகளில் ஈடுபட்டார்கள்.
செயற்கைக்கோள் (Sateilite) இணைப்புக்களை மேற்கொள்ளும் பணிகள் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவேகமாக நடைபெற்றன.
தமிழ் மக்களின் இல்லங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பனவற்றில் எல்லாம் ஐபிசி தமிழ் வானொலி ஒலித்தது. உறவுகள் உள்ளங்களை நிகழ்ச்சிகளால் நிறைத்தது.
ஐபிசி தமிழ் வானொலிச் செய்திகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றது. கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயங்கிய வானொலி நிலையங்கள் ஐபிசி தமிழ் வானொலியுடன் தொடர்பை ஏற்படுத்தி ஐபிசி தமிழ் வானொலிச் செய்திகளை ஏக நேரத்திலும், ஒலிப்பதிவு செய்தும் அந்தந்த நாடுகளில் ஒலிபரப்பி வந்தன.
ஐபிசி தமிழ் வானொலி தாயக உறவுகளுக்காக ஒருமணிநேர சிற்றலை வழியான உறவுப்பாலம் நிகழ்ச்சியையும் வழங்கி வந்தது. லண்டன் மாநகரில் இரண்டு மணிநேரம், பின்னர் மூன்று மணிநேரம் மத்தியலை MW558 வழியாகவும் ஒலிபரப்பை நடத்திவந்தது.
துறைகள் வகுக்கப்பட்டன. அந்தந்தத் துறைகளுக்கு ஒவ்வொருவர் பொறுப்பாக அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் தமது பணிகளை மிகச்சிறப்பாக ஆற்றினார்கள். வானொலி நிகழ்ச்சிகளை மிகத் தரமாக வழங்கினார்கள். ஐபிசி தமிழ் வானொலியின் புகழ் உலகெங்கும் பரவியது.
“ஐபிசி தமிழ் வானொலியின் வெற்றிக்கு தாசீசியஸின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஒலிபரப்பாளர்கள் தெரிவே காரணம்” என இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள், பாவலர் கந்தையா இராஜமனோகரன் அவர்களிடம் ஐபிசி தமிழ் வானொலி பற்றி உரையாடும்பொழுது எடுத்துக்கூறியிருந்தார்.
தாசீசியஸ் அவர்களைத் தொடர்ந்து சிவரஞ்ஜித் அவர்களும் ஐபிசி தமிழ் வானொலியின் இயக்கநராகப் பணியாற்றினார். இவரது காலத்தில் வானொலித்துறையுடன் தொடர்புடைய மிகச் சிறந்த ஆளுமையாளர்கள் ஐபிசி தமிழ் வானொலியுடன் இணைக்கப்பட்டார்கள். நிகழ்ச்சிகள் மென்மேலும் மெருகூட்டம் பெற்றன.
சிவரஞ்ஜித் அவர்களை அடுத்து ரமணன் பொறுப்பு வகித்தார். ஐபிசி தமிழ் வானொலி பல்வேறு இன்னல்களையும் சந்தித்தது. கலையகம் இன்றியும் வானலையில் நிகழ்ச்சிகளை வழங்கிய வரலாறும் உள்ளது.
ஐபிசி தமிழ் வானொலியை இயக்குகிறோம் எனப் பொறுப்பேற்றவர்கள் சரியாகக் கொண்டு செல்லவில்லை. ஒரு கட்டத்தில் ஐபிசி தமிழ் வானொலி அதனது இருப்பையே நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான், ஐபிசி தமிழ் வானொலியை ஆரம்ப நாள் முதல் கேட்டுவந்தவரும், ஐபிசி தமிழ் வானொலியை மிக உன்னதமாக நேசித்துவந்தவருமான வர்த்தகப்பெருமகன் கந்தையா பாஸ்கரன் அவர்கள் ஐபிசி தமிழ் வானொலிக்குப் புத்துயிர் அளித்தார்.
உலகில், தமிழ் ஒலிபரப்பு வரலாற்றில் ஐபிசி தமிழ் வானொலிக்கு எப்பொழுதும் தனி இடம் உள்ளது. வானொலித்துறைசார் வல்லுனர்கள் பலர் ஐபிசி தமிழ் வானொலியின் லண்டன் கலையகத்துக்கு வருகைபுரிந்து செல்கின்றார்கள். அவர்கள் எல்லோருமே “ஐபிசி தமிழ் கலையகம் இவ்வளவு உயர்வாக அமைந்திருப்பது தமிழ் மக்களுக்கும், தமிழ் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கும் பெருமை சேர்க்கிறது” எனக் கூறிவருகின்றார்கள்.
உலகில் ஒரு தனியார் வானொலிக்கலையகம் இவ்வளவு உயர்வாக, தரமாக, நவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் அமைந்திருக்கவில்லை.
அந்தச்சிறப்பை ஐபிசி தமிழ் வானொலிக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ள, ஐபிசி தமிழ் வானொலியை உள்ளத்தில் நேசிக்கும், ஐபிசி தமிழ் குழுமத்தின் முதல்வர் கந்தையா பாஸ்கரன் அவர்கள் கரங்களில் ஐபிசி தமிழ் வானொலி இருக்கும் இவ்வேளையில் வெள்ளிவிழா கொண்டாடுவதும் பெரும் மகிழ்வுக்குரியதாகும்.
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் தாசீசியஸ் போட்ட விதை விருட்சமாகி வியாபித்துள்ளது!
















