திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்திக்கு சர்வதேச ஏலம் கோர தீர்மானம்
திருகோணமலை எண்ணெய் தாங்கிவளாகத்தில் உள்ள 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக, டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) அடுத்த மாதத்திற்குள் சர்வதேச ஏலம் கோர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வணிக ரீதியான பயன்பாட்டை நோக்கிய ஒரு படியாக, இந்தத் திட்டத்திற்கான முதலீட்டாளர்களுக்கான அழைப்பிற்கு அமைச்சரவை கலந்துரையாடல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
61 தாங்கிகளில் ஒரு பகுதி அபிவிருத்தி
TPTL சொந்தமான 61 தாங்கிகளில் ஒரு பகுதி இந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்கள் மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி முடிவிற்காக அமைச்சரவை குழுவிற்குத் திருப்பி அனுப்பப்படும்.

2021-ல் நிறுவப்பட்ட TPTL-ன் 51% பங்குகள் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கும், 49% பங்குகள் லங்கா IOC-நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.
1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கிய இந்த ஒத்துழைப்பு, பின்னர் தொடர்ந்தும் வலுப்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியின்மை
கடந்த ஆண்டு, இரு தரப்பிற்கும் எரிசக்தியை வழங்கக்கூடிய ஒரு பல்நோக்கு குழாய் அமைப்பை உருவாக்குவதற்காக இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தமும் எட்டப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் அமைதியின்மையின் பின்னணியில், பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த பெட்ரோலிய மையத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் இலங்கையும் இந்தியாவும் விசேட கவனம் செலுத்தியுள்ளன.