கடனட்டை மற்றும் தங்கக்கடன் முற்பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடனட்டைகள் மற்றும் சேமிப்பு வைப்புக்கள் தொடர்பான உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி உத்தரவொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 21, 2021 அன்று வழங்கப்பட்ட, கடனட்டை முற்பணங்கள், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக வங்கி மேலதிக பற்று மற்றும் அடகு முற்பணங்கள் மற்றும் புதிய தங்கக்கடனுக்கான முற்பணம் மற்றும் புதுப்பிக்கப்படும் தங்கக்கடன் முற்பணம் மீதான வட்டிக்கு மேல் வரம்பு விதிக்கும் உத்தரவு இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனட்டைகளுக்கான புதிய வட்டியை அடுத்த பட்டியல் சுழற்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி முறைமைக்குள் வைப்புகளை ஈர்க்கும் வகையில் வைப்பு விகிதங்களை போதுமான அளவில் சரிசெய்யுமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதுவரை பின்பற்றிய இறுக்கமான பணவியல் கொள்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, 2020 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் கட்டளை 2.1 இரத்துச் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.