திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்களை தேடும் பணி தீவிரம்
திருகோணமலை திருக்கடலூரில் இருந்து கடந்த 23ம் திகதி தொழிலுக்குச் சென்ற 03 கடற்றொழிலாளர்கள் இன்று 04 நாட்களாகியும் இன்று வரை (26) கரை திரும்பாத நிலையில் அவர்களைத் தேடும்பணியில் முழு வீச்சுடன் கடற்றொழிலாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு தொழிலுக்குச் சென்ற விஜேந்திரன் சஞ்ஜீவன் (21வயது), சிவசுப்பிரமணியம் நதுஜன் (21வயது), ஜீவரெட்னம் சரண்ராஜ் (34வயது) ஆகியோரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
இவர்களைத் தேடும் பணியை இவர்கள் அங்கத்துவம் பெறுகின்ற திருக்கடலூர் விபுலானந்தா மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 24ம் திகதி 07 படகுகள் மூலமாகவும், மறுநாள் 16 மீன்பிடிப்படகுகள் மூலமாகவும் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நாளைய தினம் (27) 04 தாங்கிப் படகுகளும், 04 சிறிய படகுகளையும் தேடுதலுக்காக அனுப்ப ஆயத்தம் செய்யப்படுவதாக மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தேடுதல் நடவடிக்கை காரணமாக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஒத்த தீர்மானமாகக்
கடலுக்குச் செல்வதற்கான மறிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் 2000ற்கு அதிகமான
மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் காணாமல்போனவர்களை எதிர்பார்த்து கடற்கரையில்
காத்து நிற்கின்றனர்.