எல் நினோ மற்றும் புவிவெப்பமயமாதல் தீவிரம்: கடல் மேற்பரப்பு வெப்பநிலை புதிய உச்சம்
எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவிவெப்பமயமாதல் காரணமாக உலகப் பெருங்கடல்களின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 21.1 பாகை செல்சியஸை எட்டியுள்ளது. இது இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவான 21.09 பாகை செல்சியஸ் என்ற சாதனையை முறியடித்துள்ளது.
வழக்கமாகத் தென் அரைக்கோளத்தில் கோடைகாலம் முடிவடையும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களிலேயே கடல் வெப்பநிலை உச்சத்தை அடையும் நிலையில், இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் இப் புதிய சாதனை பதிவாகியுள்ளது.
தீவிர காலநிலை
தற்போது தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வு எதிர்வரும் நவம்பர் முதல் ஜனவரி மாதத்திற்குள் தனது உச்சக் கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதால், கடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித செயற்பாடுகளால் கடல் வெப்பநிலை ஏற்கனவே 0.8 பாகை செல்சியஸ் உயர்ந்துள்ள நிலையில், எல் நினோவின் தாக்கம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடல் வெப்பநிலை அதிகரிப்பானது கடல்சார் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், கடல் மட்ட உயர்வு, கடும் புயல் போன்ற தீவிர காலநிலை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சூடான கடலினால் வளிமண்டலத்திலுள்ள கார்பனீரொக்சைடு வாயுவை உறிஞ்சும் திறன் குறைவடைவதால் உலகளாவிய காலநிலைச் சமநிலை பெருமளவில் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.