சிப் சந்தையில் அதிரடி காட்டும் இன்டெல்
பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், அயர்லாந்தின் லீக்ஸ்லிப் பகுதியில் அமைந்துள்ள தனது பிரம்மாண்ட உற்பத்தி ஆலையின் 49 சதவீத பங்குகளை அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடமிருந்து $14.2 பில்லியனுக்கு மீண்டும் விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நிதி நெருக்கடியில் இருந்தபோது, தனது உற்பத்தி விரிவாக்கத்திற்காக $11.2 பில்லியனுக்கு இந்தப் பங்குகளை இன்டெல் விற்றிருந்தது.
தற்போது நிறுவனத்தின் நிதிநிலை சீராகி வருவதாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சிப்களுக்கான தேவை அதிகரிப்பதாலும், இந்த ஆலையின் முழு உரிமையையும் மீண்டும் தன்வசப்படுத்த இன்டெல் திட்டமிட்டுள்ளது.
மறுசீரமைப்பு
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், இன்டெல் நிறுவனத்தைப் பெரும் நஷ்டத்திலிருந்து மீட்டுள்ளன.

குறிப்பாக, என்விடியா மற்றும் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து கிடைத்துள்ள பில்லியன் கணக்கிலான முதலீடுகள் நிறுவனத்தின் பலத்தை அதிகரித்துள்ளன.
தற்போது அமெரிக்க அரசாங்கமே இன்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.
புதிய கடன்
தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் சென்ட்ரல் பிராசஸர்களுக்கான தேவை, ஏஐ (AI) கருவிகளின் பயன்பாட்டால் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளதும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும்.

இந்த 49 சதவீத பங்கு வாங்குதலுக்காக நிறுவனத்திடம் உள்ள ரொக்கம் மற்றும் $6.5 பில்லியன் புதிய கடன் ஆகியவற்றைப் பயன்படுத்த இன்டெல் திட்டமிட்டுள்ளது.