ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து வெளியிடவுள்ள அனைத்துலக தமிழர் பேரவையின் யாப்பு
2026 அனைத்துலகத் தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியதில்(UK), பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடவுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் பலநாடுகளிருந்தும் ஒன்றுகூடி அனைத்துலக தமிழர் பேரவையின் யாப்பை வெளியிடவுள்ளனர்.
குறித்த நிகழ்வானது ஜனவரி 24, 2026 அன்று முறையாக இடம்பெறவுள்ளது.
பொங்கல் பண்பாடு
உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே பொங்கல் பண்பாட்டின் நோக்கம் உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே தமிழர் திருநாளான பொங்கலின் மையப் பண்பாடாகும்.
தமிழர்களின் பண்பாடு என்பது வாழ்வியலின் அடிப்படை மட்டுமன்றி, உழைப்பையும் வலுவூட்டலையும் அடையாளப்படுத்தும் ஆதாரமாகவும் திகழ்கிறது என்பதற்கு பொங்கல் பண்டிகை தக்க சான்றாக அமைகிறது. தமிழ் மக்களின் பண்பாட்டுப் பண்டிகைகளில் ஒன்றான பொங்கல், பண்டைய காலம் தொட்டு எமது மரபோடும் வரலாறோடும் கலந்த அற்புதமான விழாவாகும்.

இயற்கையை வழிபடும், விலங்குகளின் மீது காருண்யத்தை வெளிப்படுத்தும், உழைப்பை உயர்வாக மதிக்கும் தைப்பொங்கல், தமிழர்களின் சிறந்த பண்பாட்டுச் சின்னமாகவும் அறிவு வெளிப்பாடாகவும் விளங்குகிறது.
தமிழர்களின் தொன்மையான வாழ்வியலிலிருந்து இன்றுவரை முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் நெல் உற்பத்தி மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதன் இயக்கத்தையும் தைப்பொங்கல் தெளிவாக உணர்த்துகிறது.
இதன் வழியாக தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற பெரும் செய்தி தைப்பொங்கலில் வலியுறுத்தப்படுகிறது.
வலுவான பிணைப்பு
இன்றைய உலகம் பாரிய மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றபோதும், தமிழர் தேசத்தின் அடிப்படை பொருளாதார உழைப்பாகவும் பண்பாடாகவும் நெற்செய்கை தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
கடந்த காலத்தில் எமது மக்கள் சந்தித்த கடும் அவலங்களுக்குப் பின்னரும், பொருளாதார ரீதியாக மீண்டெழுவதற்கான உயிர்மூச்சாக எமது மண்ணும், மண்ணை நம்பிய விவசாயமும் இருந்து வருகின்றன.

உலகம் தழுவிய வாழ்வை ஈழத் தமிழர்கள் வரித்துக்கொண்டுள்ள இன்றைய சூழலில், தமிழர் பொங்கல் ஒரு உலகளாவிய பண்டிகையாகப் பரிமாணம் பெற்றுள்ளது.
இது எமது உழைப்பின் அடையாளமாக மட்டுமல்லாது, போராட்ட வாழ்வின் ஒரு கூறாகவும் மாறியுள்ளது. கனடா போன்ற நாடுகள் தமிழ் மரபுத் திங்களை அங்கீகரித்துள்ளமை, தமிழர் பண்பாட்டின் வலிமையும் அது நாடு கடந்து நிலைபெற்றிருப்பதையும் உணர்த்துகிறது.
இந்தப் பண்டிகை வழியாக உழைப்பின் உன்னதத்தை உணரும் நாம், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தொழிநுட்ப அறிவையும் புதிய சிந்தனைகளையும் உள்வாங்கி, தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தன்னிறைவான தாயகத்தை தலைநிமிரச் செய்வது எம் அனைவரின் கடமையாகும். இதுவே நிலத்திலிருந்து பலம் பெறும் எமது உறவுகளை ஒன்றிணைக்கும் வலுவான பிணைப்பாகும்.
தமிழர் பேரவையின் யாப்பு
மேலும் இந்த ஆண்டு அனைத்துலகத் தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியதில்(UK), பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதுடன், ஈழத்தமிழர்கள் பலநாடுகளிருந்தும் ஒன்றுகூடி அனைத்துலக தமிழர் பேரவையின் யாப்பை (Constitution) ஜனவரி 24, 2026 அன்று முறையாக வெளியிடுகிறோம். இந்த யாப்பு ஒரு ஆவணம் மட்டும் அல்ல.
அது-உலகத் தமிழர்களின் ஒற்றுமையின் உறுதி. நீதி, ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகிய மதிப்புகளின் எழுத்துப்பூர்வ உறுதிமொழி.

அன்பான உறவுகளே, இயற்கையை நட்பாகக் கொள்வதே ஈழ தேசத்தின் மேன்மையின் அடையாளம், நாட்டில் ஏற்பட்ட போரினால் பல இன்னல்களைச் சந்தித்துள்ள எமது மக்கள் நம்பிக்கையுடன் மீண்டெழவும், நீதி மற்றும் விடுதலையை அடையவும்.
இந்த நாள் புதிய நம்பிக்கையையும் புதிய விடியலையும் வழங்க வேண்டி, இயற்கை எனும் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.