தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அநுர விடுத்துள்ள அறிவிப்பு
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் வசதிகளை வழங்க தமது அரசாங்கம் தயாரெனவும் தெரிவித்துள்ளார்.
தென் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பிலான வன்முறைகள்
நாட்டின் அடிப்படைச் சட்டத்திற்கு அனைவரும் பணிய வேண்டுமெனவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்தை சார்ந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட வன்முறை செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான வன்முறைகள் தொடர்பான தரவுகள் குறித்து தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகள் இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதுடன், குற்றத் தடுப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்
இந்த சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தென் மாகாண பொலிஸ் பிரதானிகள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


