விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ள ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள்
இலங்கையைச் சேர்ந்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்க, இலங்கை திரும்பும் விமானப் பயணத்தின்போது அவரது விளையாட்டு உபகரணங்கள் சந்தேத்திற்கிடமான முறையில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உட்பட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உபகரணங்கள் சேதம்
அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5:10 மணிக்கு துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

இந்தநிலையில், அவருக்குப் புதிய ஈட்டிகளை (javelins) வழங்கவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தரங்கவின் பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அரசாங்கச் செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய ஈட்டிகளை விரைவாக வாங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
எங்கள் தடகள நட்சத்திரத்திற்கும் அவரது ஒலிம்பிக் கனவுக்கும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும், என்று அமைச்சர் கூறினார்.
ஒலிம்பிக் போட்டி இலக்கு
ஹங்கேரியின் புடாபெஸ்டிலிருந்து திரும்பும் பயணத்தின்போது தரங்கவுக்குச் சொந்தமான ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சேதம் தொடர்பாக விமான நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது குறித்தும், அதேவேளையில் சாத்தியமான சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் அதேவேளையில், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டுள்ள தரங்கவுக்குத் தேவையான அரச ஆதரவையும் வசதிகளையும் தொடர்ந்து வழங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.