மட்டக்களப்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைகள், இன்று (25.04.2024) களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய, ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இழப்பீடு வழங்குதல்
இதன்போது, கொழும்பு காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் நேரில் வருகை தந்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 61 பேரிடமும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, குறித்த விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் போனோருக்கான அலுவலக அதிகாரி ஒருவர், "இதுவரையில் எமது அலுவலகத்திற்கு 21000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பெறப்பட்ட முறைப்பாடுகள்
அவற்றில் முப்படையினர், பொலிஸார் என இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில் 14988 விண்ணப்பங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவற்றில் 5555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 4200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக இழப்பீட்டு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, 2000 சிபாரிசு கடிதங்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு இறப்பு சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் : குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |