ஜெர்மனியில் காணாமற்போன இலங்கையர் தொடர்பில் விசாரணை
ஜெர்மனிக்கு சொந்தமான கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது காணாமற்போன இலங்கையர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனிக்கு சொந்தமான MV Sanchuka கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த 21 வயதான சிராத் சந்தரு (Chirath Sandaru) எனும் இளைஞரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.
மில்லனிய, உடுவர பகுதியை சேர்ந்த அவர், MV Sanchuka கப்பலில் பணிபுரிவதற்காக ஜனவரி மாதம் 2 ஆம் திகதி சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
இந்நிலையில், நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து சம்மேளனத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, அந்த சம்மேளனத்தின் பரிசோதகர் ஒருவர் இலங்கை கப்பல் பணியாளர் பணிபுரிந்த கப்பலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக தேசிய வர்த்தக கப்பல் சங்கத்தின் தலைவர் பாலித அத்துகோரல தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வணிகக் கப்பற்றுறை செயலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கோரல்
இந்த விடயம் தொடர்பான முதற்கட்ட அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில், அந்த தகவல்களை வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காணாமல்போன இலங்கை இளைஞரை தேடுவது தொடர்பில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளதாக தேசிய வர்த்தக கப்பல் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |