வரி விலக்கு பெறுவது குறித்து விளக்கமளித்துள்ள இறைவரித் திணைக்களம்
குடியிருப்புச் சொத்து அல்லது தனிப்பட்ட வாகனங்களை விற்கும்போது வரி விலக்கு பெறுவது எப்படி என்பது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
அதன் பிரகாரம், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தங்கள் குடியிருப்புச் சொத்து அல்லது தனிப்பட்ட வாகனங்களை விற்கும் மக்கள் இனி வரி செலுத்தாமல் விற்கலாம் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முந்தைய வரி விதிப்பு முறை
குடியிருப்புச் சொத்துக்களைப் பொறுத்தவரை விற்பனைக்கு முன்பு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு சட்டப்பூர்வ உரிமையைக் கொண்டிருந்தால் மற்றும் அந்தக் காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்த இடத்தில் வசித்திருந்தால் விற்பனையாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், விற்பனையிலிருந்து கிடைக்கும் முழுத் தொகைக்கும் வரி அறவிடப்பட மாட்டாது. குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிள்ளைகளுக்குச் சொத்து மாற்றுவதற்கும் வரி விலக்கு உண்டு.
மூன்றாம் தரப்பினருக்கு விற்கும்போது மட்டுமே வரி பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், வாகனங்கள் விற்பனைக்கான முந்தைய வரி விதிப்பு முறை நீக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு லாபமும் வரி அறவீட்டுக்குள் உள்ளடக்கப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
இந்நடைமுறை 2024 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், வாகனத்தின் வயது, நிலை அல்லது மாதிரியைப் பொருட்படுத்தாமல், தனியார் வாகனங்களின் விற்பனைக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.