ஐக்கிய மக்கள் சக்தியின் எவரும் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை!ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய மக்கள் சக்தியின் எவரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தமது கட்சியின் எவரும் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி பலமடைந்துள்ளதாகவும் 63 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து 90 ஆக உயர்வடைந்துள்ளது.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தமது கட்சி உன்னிப்பாக அவதானிக்கும்.ஊழல் மோசடிகள் மற்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு வழங்கப்படுகின்றது என்பதனை அவதானிக்கும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் மாற்றங்கள் இல்லை
ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்தவர்கள் தேசத்தின் நலனை கருத்திற்கொள்ளவில்லை எனவும், தனிப்பட்ட நலனை கருத்திற் கொண்டவர்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை,அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் பதவி வகித்த அதே அமைச்சரவை தொடர்ந்தும் பதவி வகிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், நாளைய தினம் இந்த அமைச்சரவையின் உறுப்பினர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
அரசியல் சாசனத்தின் பிரகாரம் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.