மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் வெளியான தகவல்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நேற்று பல ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் பிரதமரின் பதவி விலகலை அவரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ள போதிலும், பிரதமர் அலுவலக அதிகாரியை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரதமரின் உடல்நல குறைவு காரணமாக முழுமையாக பணியாற்ற முடியாத நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொருவர் பணியாற்றவுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பணிச் சுமை அதிகரித்துள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அரசாங்கத்தின் உள்ளகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்த்து அனைவருடனும் இணங்க கூடிய ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க கூடும் எனவும் சிங்கள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மஹிந்த தனது பதவி விலகுவதாகவும் புதிய பிரதமருடன் வேலை செய்வதற்கு தயார் எனவும் அலரி மாளிகை அதிகாரியுடன் தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியானது.
இது தொடர்பில் பிரதமர் அலுவலத்துடன் தொடர்பு கொண்ட சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளன. எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவலை அவரது ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல்களை, ஜனாதிபதி ஊடகப் பிரிவும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.