சுங்கத் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தும் நோக்கில் தற்போது வெற்றிடங்கள் காணப்படும் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இதற்கு எவ்விதத்திலும் செல்வாக்குகள் இடம்பெறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
இதன்படி சுங்க அதிகாரி மற்றும் சுங்கப் பரிசோதகர் போன்ற பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த, அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் புள்ளிகளின் வரிசைக்கிணங்க சுங்கத்திணைக்களத்திற்கு முதலில் வழங்கப்படுமென்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக வருமானம்
இந்நிலையில், இடம்பெறவுள்ள நேர்முகப் பரீட்சையில் உயரம் மற்றும் மார்பளவு என்பன பரீட்சைக் குழு முன்னிலையில் அளவிடப்படும்
பின்னர் சான்றிதழ்கள் பரீட்சிக்கப்படுவதுடன் சுற்றுநிருபங்ளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள படி விளையாட்டுத் திறமைகளுக்காக அங்கு புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் விபரித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சைகளில் பெறப்படும் புள்ளிகளை மீண்டும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிய பின்னர் அந்த புள்ளிகள் மற்றும் எழுத்துப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளுடன் சேர்த்து அதனை இரண்டாகப் பிரித்துக் கிடைக்கப் பெறும் புள்ளிகளின் படி முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டியல் சுங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.
மேலும் நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு நாட்டில் படித்த இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதோடு, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள முறைக்கு அப்பால் செல்லாது, வெளிப்படைத் தன்மையுடன் முன்மாதிரியான முறையில் இச்செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |