கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில் குறைந்தது 10 முதல் 30% மானோர் பிந்தைய கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய, தேசிய கண் மருத்துவமனையின் ஆலோசகரும், நீரிழிவு நிபுணருமான வருண குணதிலக (Varuna Gunathilaka) இதனை தெரிவித்துள்ளார்.
இது உலகளவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நோய்த்தொற்றுக்கு பிறகும் ஒருவர் 4 வாரங்களுக்கு தொடர்ந்து பல சிக்கல்களால் அவதிப்பட்டால், அவர், கோவிட் பிந்தைய நிலையில் இருப்பதாகக் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பிந்தைய நிலையின் பொதுவான அறிகுறிகளாக சோர்வு, தலைவலி, மூச்சுத் திணறல், தூக்கக் கோளாறுகள், விரைவான இதயத்துடிப்பு, அல்லது படபடப்பு, அறிவாற்றல் செயலிழப்பு போன்றவை உணரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சோர்வு உள்ளவர்கள், மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது என்றும் குணதிலக அறிவித்துள்ளார்.