மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் குறித்து வெளியான தகவல்
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் பொலிஸாருக்கு சமர்ப்பித்த அறிக்கையில் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த இரசாயன மாதிரிகளில் கிறிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருப்பதை அரச இரசாயன பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம்
இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கெஹெல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் மித்தெனியவில் உள்ள தோரயாய பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர் மித்தெனியவில் இருந்து மீட்கப்பட்ட சில இரசாயனங்கள், நுவரெலியாவில் உள்ள ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஹம்பாந்தோட்டைக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து கொடகமவுக்கும், கொடகமவிலிருந்து கந்தானவுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்தநிலையில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களமும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மித்தெனி மற்றும் கந்தானையில் மீட்கப்பட்ட இரசாயனங்களின் மாதிரிகளை எடுத்து அவற்றின் உள்ளடக்கங்களைச் பரிசோதித்தன.
அதன்பின்னர் அது குறித்த அறிக்கைகள் பொலிஸாருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.



