சட்டமா அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட தகவல்
சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பதில் கத்தோலிக்க திருச்சபைக்கு எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
தற்போதைய சட்டமா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஜூன் முதல் வாரத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பணிக்காலம்
இந்த விடயம் தொடர்பாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்ததாக அடிப்படையற்ற செய்திகளும் வெளியாகியுள்ளதாக ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆராய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சாகல ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மூவரடங்கிய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழுவில் சட்டமா அதிபர் ஒரு அடிப்படை பங்கை ஆற்றி வருகிறார் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தக்குழு எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆயர்கள் பேரவையுடன் தொடர்ந்தும் உரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, அந்த இடத்துக்கு புதியவர் ஒருவர் இந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டு செயற்பாடுகள் தாமதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே சட்டமா அதிபரின் பணிக்காலத்தை நீடித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆயர்கள் பேரவை
எனினும் ஆயர்கள் பேரவையின் தலைவருக்கும் சட்டமா அதிபரின் குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என்று ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 2021ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட ராஜரத்தினம், கடந்த 36 மாதங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாக ஆயர்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை முன்னிலைப்படுத்தி அவரின் பதவி நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை தாம் கண்டிப்பதாகவும் ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |