இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை இதுவரை சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியோ அல்லது உதவியோ கோரவில்லை என தெரியவந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி, சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி வழங்குமாறு இதுவரை கோரிக்கை விடுக்கவில்லையென்றாலும், நாட்டிற்குத் தேவையானால் சாத்தியமான நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க தமது குழு தயாராக இருப்பதாக மசாஹிரோ நோசாகி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நாட்டின் நிதி நிலைமை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு எவ்வாறான உதவிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றில் மிக மோசமான வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கையில் தற்போது 2.31 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
ஏற்கனவே நாட்டில் பெரும் டொலர் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு இல்லாததால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.




