அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திலிருந்து மாயமான உரம் தொடர்பில் வெளியான தகவல்
கிளிநொச்சி - அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திலிருந்து பரந்தன் கமநல சேவை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள 1500 கிலோ யூரியா தேவைப்பாடுடைய ஏனைய விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவே வெளிப்படைத் தன்மையுடன் கொண்டு செல்லப்பட்டது என மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - அக்கராயன்குளம் கமநல சேவை நிலையத்திலிருந்த 1500 கிலோ யூரியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரால் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்து அக்கராயன்குளம் பிரதேச விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த கமநல சேவை நிலையத்தில் மேலதிகமாக இருந்த யூரியா 1500 கிலோ ஏனைய மேட்டு நில விவசாயிகளுக்கு வழங்குவதற்குப் பிரதி ஆணையாளர் என்ற வகையில் வெளிப்படைத் தன்மையுடன் பரந்தன் கமநல சேவை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உரத்தினை வழங்க வேண்டிய தேவை
விவசாய விதை உற்பத்தி திணைக்களம் பல்கலைக்கழகம் விவசாயத் திணைக்களம் மாவட்ட விவசாய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உரத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இவற்றுக்கான உரத்தினையும் விவசாயிகளுக்கான உரத்தினையும் வழங்க வேண்டிய தேவையுள்ளது. குறித்த 1500 கிலோ உரம் வெளிப்படைத்தன்மையுடன் பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே வைக்கப்பட்டிருப்பதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அக்கராயன் குளம் கமநல சேவை நிலையத்திலிருந்து இரவோடிரவாக குறித்த 1500 கிலோ உரம் கொண்டு
செல்லப்பட்டதாக விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த விதமான உண்மைத்
தன்மையும் இல்லை என்பதுடன், குறித்த 1500 கிலோ யூரியாவும் பரந்தன் கமநல சேவை
நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



