சர்வதேச நாணய நிதியக்கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் குறித்து வெளியான தகவல்
சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியக்கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகள் உலகளாவிய புவிசார் அரசியலின் குறுக்குவெட்டில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
சீனா தனது கடன்களை மறுசீரமைப்பதில் சர்வதேச நாணய நிதிய விதிமுறைகளுடன் ஒத்துப்போக மறுத்து, அதற்கு பதிலாக இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குகிறது.
இந்தியா, ஜப்பான் உட்பட்ட தரப்புக்கள் மறுசீரமைப்புக்கு உடன்பட்டுள்ளன. எனவே, தற்போதைக்கு இலங்கை சர்வதேச புவிசார் அரசியலில் சிக்கியுள்ளது. இது சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்புக்கு மாத்திரமல்ல, இலங்கையின் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்
முன்னரும் 16 தடவைகளாக இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருக்கிறது. எனினும் அதன் நிபந்தனைகளை பல்வேறு காரணங்களுக்கு நிறைவேற்றத் தவறியிருக்கிறது.
எனவே தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை இறுக்கமாக நிறைவேற்றுவதற்கும், தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கமும், அதன் மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் சுயாதீன சிந்தனையாளர் தனநாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமைகள்
இதில் தவறும் பட்சத்தில், இலங்கை தீவின் எதிர்காலம் இருண்டதாகவும், உயிர்வாழ உதவிகளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தென்னாசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் ஸ்டாட்ரெட் செய்தித்தளத்திடம் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கமும் தொடர்ந்தும்
வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.