கெஹல்பத்தர பத்மேவினால் எழுதப்பட்ட இரகசிய குறிப்பேடுகள் மீட்பு - அம்பலமாகவுள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்கள்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதாள உலகக் குழுவின் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கெஹல்பத்தர பத்மே என்பவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் எட்டு குறிப்பேடுகள் (Notebooks) மீட்கப்பட்டுள்ளன
இவற்றினை கையெழுத்து பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்பு
சந்தேகநபரின் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எட்டு குறிப்பேடுகள், விசாரணையின் போது மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள், குடும்ப பெயர்களை, சந்தேகநபரின் கையெழுத்துடன் ஒப்பிட்டு பரிசோதிப்பதற்காக அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு உத்தரவிட வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
இதன்போது உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், குறித்த எட்டு குறிப்பேடுகளையும் கையெழுத்துப் பரிசோதனைக்காக பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபரை 15ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.