கைது செய்யப்பட்ட யோஷிதவின் பாட்டி! மனநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மீதான பணமோசடி குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் விக்ரமசிங்கவின் நினைவாற்றல் தொடர்பில் நீதிமன்றில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூபாய் 59 மில்லியனுக்கும் அதிகமான நிலையான வைப்புத்தொகை கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும், அந்த வங்கிக் கணக்கு யோஷித மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோரின் பெயர்களில் பராமரிக்கப்பட்டமை தொடர்பில் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையால் 2016 முதல் இடம்பெற்று வருகிறது.
வாக்குமூல பதிவு
இந்நிலையில், விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய தொண்ணூற்றேழு வயதான டெய்சி ஃபோரஸ்ட் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு நேற்று அழைக்கப்பட்டார்.
அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கூட்டுக் கணக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகக் தெரிவித்திருந்தது.
மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், பிரதிவாதியின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, பிணை கோரலை முன்வைத்ததுடன், சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை 2015 இல் தொடங்கப்பட்டதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கான விசாரணைப் பிரிவின் கோப்பு 2017 இல் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த சட்டத்தரணி, “எனது கட்சிக்காரர் முதலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைகள் தொடர்பாக ஒரு அறிக்கையை வழங்கினார்.
தொண்ணூற்றேழு வயது.
அவருக்கு இப்போது தொண்ணூற்றேழு வயது. அவர் தனது உடல் வலிமையுடன் நடமாட முடியும் என்றாலும், அவரது நினைவாற்றல் நல்ல நிலையில் இல்லை.
அவரது பெயரைத் தவிர வேறு எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. காலை உணவாக அவர் என்ன சாப்பிட்டார் என்பது கூட அவருக்கு நினைவில் இருக்காது.
இதுபோன்ற சூழ்நிலையில், 2013 இல் வங்கிக் கணக்கில் நடந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை அதிகாரிகள் அவரிடம் விசாரிக்கின்றனர்,’ என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையும் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியதுடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, கடுவெல நீதிமன்றம் சந்தேக நபரை தலா 500,000 ரூபாய் பிணையில் செல்ல உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.