நாட்டின் பண வீக்கம் மூன்று மடங்காக அதிகரிக்கும்
ரூபாயின் பெறுமதியை குறைந்தமை மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை ஆகியன காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 50 வீதத்தினால், அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில், உள்நாட்டு உற்பத்தி செய்யப்படும் அரிசியின் ஒரு கிலோ கிராமின் விலை சுமார் 300 ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை தவிர சீனி, பால் மா, மரக்கறிகள், சமையல் எரிவாயு, பாண், சிற்றுண்டிகள், ஆடைகள், புத்தகங்கள், காலணிகள் என அனைத்து பொருட்களின் விலைகளும் 35 வீதம் முதல் 70 வீதம் வரை அதிகரிக்கலாம்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சீமெந்து, மின் உபகரணங்கள், டைல்ஸ் என்பவற்றின் விலைகளும் கட்டுப்பாடு இன்றி அதிகரிக்கும். இந்த நிலைமையால், நாட்டில் காணப்படும் பண வீக்கமானது மூன்று மடங்காக அதிகரிக்கும்.
இதன் காரணமாக அப்பாவி வறிய மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்து எரிந்து போகின்றவர்களாக மாறுவது கட்டாயம் நடக்கும் எனவும் பேராசிரியர் விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.