கொழும்பில் வேகமாக பரவும் காசநோய் : சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
கொழும்பில் நிலவும் அதிக மக்கள் அடர்த்தியே, பல ஆண்டுகளாக அந்நகரில் காசநோய் பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இன்று (23.10.2026) நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 2025 ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் 968 காசநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சரிவைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்
அமைச்சர் சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின்படி, கொழும்பு நகரில் 2019ஆம் ஆண்டில் 871 காசநோய் பாதிப்புகள் பதிவாகி, 2020ஆம் ஆண்டில் 736 ஆகக் குறைந்து, 2021ஆம் ஆண்டில் 796 ஆக அதிகரித்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பின்னர் 2022இல் 1,093 ஆகவும், 2023இல் 1,130 ஆகவும் அதிகரித்தது.
இது 2019 - 2025 காலகட்டத்தில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். அதன்பின்னர் 2024இல் 1,064 ஆகவும், 2025இல் 968 ஆகவும் குறைந்தது.
கொழும்பு மாவட்டத்தில் பதிவான காசநோய் வழக்குகளில் 25வீதம் கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள்இருந்து பதிவாகியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டுப்படுத்தும் முயற்சிகள்
காசநோயால் பாதிக்கப்பட்ட சிலர் முறையான மருத்துவ சிகிச்சையை நாடத் தவறுவதால், இந்நோய் தொடர்ந்து பரவி வருகிறது என்றும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், நோயாளிகளுக்கு இலவச மருந்துகளும் உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருவதாகவும், காசநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடமாடும் சிகிச்சை சேவைகள் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு முதல் கொழும்பு நகரில் பதிவாகும் காசநோய் பாதிப்புகள் குறைந்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் மேலும் குறைவு பதிவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.