வடக்கின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் - பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள்நிர்மாணப் பணிகள் தீவிரம்
பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது வடக்கின் தொழில்துறை மறுமலர்ச்சிக்கான முக்கிய ஆரம்பமாக அமையும் எனவும் கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு நேற்று நேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு இடம்பெற்று வரும் முதற்கட்ட கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “பல ஆண்டுகளாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இன்று மீண்டும் உயிர்பெற்று வருகிறது.

இது ஒரு தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் மாத்திரமல்ல. வடக்கின் தொழில்துறை வளங்களை மீண்டும் மக்களின் பொருளாதாரத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.” “இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நாட்டப்பட்டது.
தற்போது சுமார் ரூ.263 மில்லியன் பெறுமதியான முதற்கட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுமையான திட்டத்தை விரைவில் நிறைவு செய்து உற்பத்தியை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும்.
“நாட்டுக்குத் தேவையான பல அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.
நேரடி வேலைவாய்ப்புகள்
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் முழுமையான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, காஸ்டிக் சோடா, திரவ குளோரின் உள்ளிட்ட முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.
இதன் மூலம் இறக்குமதி சார்பைக் குறைத்து நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும். “குறிப்பாக குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கிலும் முக்கியமானதாகும்.
“இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான நோக்கம் வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். தொழிற்சாலை நிர்மாணப் பணிகளிலும், எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகளிலும் பல்வேறு துறைகளில் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வடக்கு மாகாண இளைஞர்கள் தமது பிரதேசத்திலேயே தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.
“வடக்கின் வளங்கள் வடக்கின் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட தொழிற்துறை வளங்களை மீண்டும் உயிர்ப்பித்து, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
“பரந்தன் மீண்டும் இயங்கும் போது, அது ஒரு தொழிற்சாலையின் வெற்றி மாத்திரமாக இருக்காது.
கிளிநொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும், வடக்கின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கும் அது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். மக்களின் வளத்தைக் கொண்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எமது இலக்கு” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

