இந்தோனேஷியா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் - ஆளுநர்
விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷியா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்தோனேஷpயத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கான இந்தோனேஷயத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் விவரித்தார்.
வடக்கு மாகாணத்தின் பல்வேறு தேவைகளையும் தற்போதை அரசாங்கம் கண்டறிந்து நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கு மாகாணம் மிகப்பெரிய அபிவிருத்திக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் வளமுள்ள மாகாணம் வடக்கு மாகாணம் எனத் தெரிவித்த ஆளுநர், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றமை வேதனையானது எனக் குறிப்பிட்டார்.



