ரோஹிங்கியா அகதிகளை நிராகரித்து, படகை மலேசியா நோக்கி அனுப்பிய இந்தோனேசியா
இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாண கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்குத் தஞ்சம் வழங்க இந்தோனேசிய அரசு மறுத்துள்ளது.
இதையடுத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அகதிகளைக் கொண்ட படகை மலேசியாவை நோக்கி இந்தோனேசியப் படையினர் அனுப்பியிருக்கின்றனர்.
ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா. மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் விடுத்த கோரிக்கையினை இந்தோனேசிய அரசு நிராகரித்துள்ளது.
அகதிகளுக்கு உடைகள், எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் படகைப் பழுது பார்த்துக் கொடுத்துள்ள இந்தோனேசிய அரசு அவர்களை இந்தோனேசியக் கடல் பகுதியிலிருந்து வெளியேற்றி இருக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசியுள்ள இந்தோனேசியக் கடற்படை அதிகாரி தியான் ஸூர்யன்ஷ்யத், ரோஹிங்கியாக்கள் இந்தோனேசிய நாட்டவர்கள் கிடையாது எனக் கூறியுள்ளார். அத்துடன் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் பல்வேறு விதமான அரசு அடக்குமுறைகள் மற்றும் வன்முறை
தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ரோஹிங்கியா மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி
வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கோருவது
தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.