இந்திய-சீன புவிசார் அரசியலில் சிக்காது கவனமாக காய்களை நகர்த்தும் ஜனாதிபதி
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி நடத்தும் தெற்காசிய நிதியமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு செல்லும் முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் செல்ல தீர்மானித்துள்ளார்.
ஜப்பானிடம் கோரிக்கை விடுக்க செல்லும் ஜனாதிபதி
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் எதிர்நோக்கி வரும் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாக வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த சீனா, இந்தியா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள தரப்பினருக்கு அழைப்பு விடுக்குமாறு ஜப்பானிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுப்பதற்காக ஜனாதிபதி அந்நாட்டுக்கு செல்ல உள்ளதாக EconomyNext என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான விடயத்திற்கே ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் ஜப்பான் பிரதமரை, ஜனாதிபதி டோக்கியோில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபத செயலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்துள்ள மாநாடு
ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் கலந்துக்கொள்வாற்காக எதிர்வரும் 25 ஆம் திகதி புறப்பட்டுச் செல்லும் ஜனாதிபதி 30 ஆம் திகதி நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பல் தரப்பு நிதி நிறுவனங்களின் 55 வது ஆண்டு கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துக்கொள்ள உள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி, ஜப்பான் விஜயத்திற்கு முன்னர் இலங்கையின் நிதி ஆலோசனை குழுவான பிரான்ஸ் நாட்டின் Lazard நிறுவனம், இந்தியா, சீனா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உள்ளார்.
இதனிடையே சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் பின்னர், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரண பொதியை 48 மாதங்களுக்குள் வழங்க அண்மையில் இணக்கம் காணப்பட்டது.
இலங்கையில் துரிதமான பொருளாதார மறுசீரமைப்பு ஏற்பட வேண்டும் என்பதுடன் மேற்குலக கடன் உரிமையாளர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் அனுமதியும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் சீனாவிடம் மண்டியிட்டுள்ள இலங்கை
EconomyNext இணையத்திடம் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், ஜப்பான் நாட்டை இலங்கையின் அபிவிருத்தியின் நீண்டகால பங்காளியாக ஜனாதிபதி கருதுகின்றார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாங்கள் இந்தியா மற்றும் சீனாவிடம் மண்டியிட்டுள்ளோம். இந்த நிலைமையில், அந்நாடுகள் தமது நோக்கங்கள் மற்றும் பிரயோசனங்களுக்காக எமக்கு அழுத்தங்களை கொடுக்கின்றன.
இதனால், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு ஜப்பானே மிக சரியான தெரிவு எனக் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலைமையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய- சீன புவிசார் அரசியலில் சிக்கிக்கொள்வதை தவிர்ப்பதற்காக வெளிநாட்டுக் கொள்கைக்குள் மிக கவனமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.