இந்திராகாந்தியின் இரகசிய திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் மோடி! ஆசியாவில் நடக்கும் அரசியல் ஆட்டம்...!
கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா, இலங்கை தமிழர் தீர்வு விடயத்தில் தமது உச்சக்கட்ட இராஜதந்திரத்தை பயன்படுத்திக்கொள்ளுமா? இந்த கேள்வியைக் கேட்கும் போது, அவ்வாறு என்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது? என்பதைப் பலரும் வினவலாம். சிலர் சந்தேகத்துடன் ஏற்றுக்கொள்ளலாம்.
இந்தநிலையில் முன்னைய காலத்தைக் காட்டிலும் தற்போது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் பொன்னான சந்தர்ப்பம் என்றே கூறவேண்டும். இதுவரையான காலப்பகுதியில் தமிழர் விடயத்தில் இந்தியா, இலங்கையைக் கையாண்ட விதம் இறுதியில் இந்தியாவுக்கே பாதமாகவே முடிவடைந்தது.
இந்தியத் தமிழர்களை இந்தியா திருப்பியழைத்து கொண்ட சிறிமா- சாஸ்திரி உடன்பாடு, இலங்கையின் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கியமை போன்ற விடயங்களை இங்கு சுட்டிக்காட்டமுடியும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை எனும்போது, இந்தியா, எப்போதும் தமது நாட்டு நலனுக்கு முன்னுரிமை வழங்கியே தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு இலங்கையுடன் செயற்பட்டது என்பது அனைவரும் உணர்ந்த விடயம்.
எனினும் இந்தியா, தமது தந்தை நாடு என்ற உணர்வு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருவதால் என்னதான் இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்காக நல்லதைச் செய்யாவிட்டாலும் இலங்கைத் தமிழர்கள், இந்தியாவின் மீதுள்ள தமது நம்பிக்கையைக் குறைத்துக்கொள்வதில்லை.
இதற்கு, இலங்கையின் அரசாங்கங்களும் காரணமாக இருந்திருக்கின்றன. தற்போது வரை அவ்வாறே செயற்பட்டு வருகின்றன. தமிழர்களை இலங்கையின் அரசாங்கங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையில் நோக்கி வருவதே இலங்கைத் தமிழர்கள் இந்தியாவைக் கண்மூடிக்கொண்டு நம்புகின்ற நிலைக்குக் கொண்டு வந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நேரு மற்றும் சாஸ்திரி காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள், இந்தியாவினால் விட்டுக்கொடுப்புக்கு உட்படாத நிலையிலேயே இருந்து வந்தன என்று எடுத்துக்கொள்ளலாம்.
எனினும் 1962 ஆம் ஆண்டு இந்திய - சீன யுத்தம் மோக சூழ்நிலையிலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ராஜதந்திர முறுகல்கள் ஏற்படுகின்றன.
அதில் இலங்கையும் சில வெற்றிகளைப் பெற்றுக்கொள்கிறது. இந்திய- சீனா போர் மோக காலத்தில் எந்த நாட்டுக்கும் சார்பாக நடந்துகொள்ளப்போவதில்லை என்று கூறிய இலங்கையின் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, மறைமுகமாகச் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சார்பாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தாம் அணிசேராக் கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இதற்காக அணி சேரா மாநாட்டையும் இலங்கையில் நடத்துகிறார். அதுவும் தமக்கு சார்பாக நடந்து கொள்வதற்காகச் சீனாவினால் இலங்கைக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட பி.எம்.ஐ.சீ.எச் என்று கூறப்படுகின்ற பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இந்த மாநாடும் நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் 1948 இல் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளிகளின் குடியுரிமை பறிக்கப்பட்ட பின்னர், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும்- இலங்கையின் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலைக்கும் இடையில் இந்திய வம்சாவளிகளை இந்தியாவுக்கு திருப்பியழைத்துக்கொள்ளும் உடன்பாடு எட்டப்பட்டபோது , நேரு அதனை நடைமுறைப்படுத்த தாமதப்போக்கை காட்டி வந்தார்.
இந்த உடன்பாட்டின்போது இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளிகள் சுயமாக இந்திய பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
எனினும் இலங்கை பிரஜாவுரிமை பெறத்தவறிய இந்திய வம்சாவளிகளுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டையே இந்தியா கொண்டிருந்தது.
எனினும் 1964இல் நேரு மறைந்த காலத்தில், இலங்கையின் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இந்தியாவில் பதவிக்கு வந்த பிரதமர் சாஸ்திரியின் பலவீனமான தன்மையைக் கருத்திற்கொண்டு இலங்கையில் வாழ்ந்த சுமார் 4இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியா பொறுப்பேற்றுக்கொள்ளும் உடன்பாட்டை எட்டினார்.
இந்திய- சீன போரில் இந்தியாவுக்குச் சார்பாக நடந்துகொள்வதற்காக ஸ்ரீமாவோவினால் சாஸ்திரிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையிலேயே சாஸ்திரி இதற்கு உடன்பட்டார்.
இதன்கீழேயே இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளிகள் 4இலட்சம் பேர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். இதற்கு பின்னர் இந்தியாவின் பிரதமராக வரும் இந்திரா காந்தி, நேரு சிறையிலிருந்தபோது எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் மற்றும் அவரின் கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையுடன் செயற்பட முனைகிறார்.
இதன் ஒருகட்டமாக்கச் சீனாவைப் போன்று இந்தியா பண ரீதியான உதவியை இலங்கைக்கு வழங்காது. கலாச்சார மற்றும் ஏனைய விடயங்களில் இலங்கையை சந்தோசப்படுத்துகிறது.
அதில் ஒரு விடயமே இந்தியாவுக்கு பாரியளவில் பயனைத் தராத கச்சத்தீவை இலங்கைக்குச் சந்தோசமாக வழங்கியமையாகும். இந்த கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கியதன் மூலம் இலங்கையின் ஏனைய நாடுகளின் செல்வாக்கை விட இந்தியாவின் செல்வாக்கு மற்றும் தலையீடு அதிகரித்து வந்துள்ளமையை உணர்ந்துகொள்ளமுடியும்.
இதனை இந்தியா, இலங்கையைத் தொடர்ந்தும் தமது கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதன் காரணமாகவும் இருக்கலாம். இதனையடுத்து இலங்கையில் ஜே,ஆர் ஜெயவர்த்தன ஆட்சிக்கு வருகிறார்.
இதன்போது ஜவகர்லால் நேரு காலத்திலிருந்து இந்தியா சோவியத் ரஷ்யாவுடன் உறவைக் கொண்டிருந்த நிலையில், ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் அமெரிக்கச் சார்பு கொள்கையை கடைப்பிடிக்கிறது.இதில் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு வழங்கும் திட்டமும் ஜே.ஆரிடம் இருந்தது.
இந்த சூழ்நிலையிலேயே இலங்கைக்கு எதிராக இந்தியாவின் கடும்போக்கு நிலைப்பாடு ஆரம்பமாகிறது என்று கூறமுடியும். புலனாய்வு தகவல்களின்படி இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுத பயன்பாட்டுக்கு 1982ஆம் ஆண்டு காலப்பகுதிலேயே பயிற்சிகளை ஆரம்பித்து விட்டது.
இது இந்தியப் படையினர் சிறு குழுக்களாக இலங்கை இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளை வழங்கியது. எனினும் அதனை இந்தியாவின் இந்திரா அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில், இலங்கையில் 13 படையினர் கொல்லப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு எதிரான 1983 வன்முறைகள், இந்தியாவை இலங்கை விடயத்தில் அதிக கரிசனை நிலைக்குக் கொண்டு வந்தன.
இதனையடுத்தே இலங்கையின் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா பகிரங்கமாகவே ஆயுதப்பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தது. ஒருமுறை ஜே,ஆர் ஜெயவர்த்தன பொதுக்கூட்டம் ஒன்றில் “இந்திரா ஒரு பசுக்கன்று என்றும் அவருடைய தந்தையான நேருவுடன் தாம் உறவைக்கொண்டிருந்ததாகத் தெரிவித்த கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டமுடியும்.
இதற்கு பின்னர் வந்த காலகட்டங்கள், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிறைந்த சூழ்நிலையை ஏற்படுத்திய காலகட்டங்களாக இருந்தன.
இந்தநிலையில் சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திரா காந்திக்குப் பின்னர் பிரதமரான ராஜீவ் காந்தி, இந்திரா காந்தியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வுக்காக இலங்கையுடன் 1987 இந்திய- இலங்கை உடன்படிக்கையைச் செய்து கொண்டார்.
இது ஆரம்பத்தில் இந்தியா, தமது ஆதிக்கத்தை இலங்கையைச் செலுத்தியதாகக் கருதப்பட்டபோதும், இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவுடன் போரை ஆரம்பித்த பின்னர், தமது ராஜதந்திர நகர்வில் இந்தியா தோற்றுப்போனதாகவே கருதப்படுகிறது.
ஆக மொத்தம் நேரு, இந்திரா, ராஜீவ் என்ற மூன்று குடும்ப வாரிசு பிரதமர்கள் இலங்கை விடயத்தில் இந்தியாவின் செல்வாக்கைச் செலுத்தி வந்தபோதும் அவற்றில் இந்திய நலனுக்கான அல்லது இலங்கைத் தமிழர்களுக்கான எந்தவொரு சிறந்த தீர்வை பெறமுடியவில்லை.
எனினும், இன்று இந்தியப் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இந்தியாவின் செல்வாக்கை இலங்கையின் நிலைநாட்டும் ராஜதந்திர முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல்லை அடைந்துவிட்டார் என்றே கருதமுடியும்.
மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சீனாவுக்கு நிகராக இலங்கையில் இந்தியா செல்வாக்கு செலுத்தமுடியாது என்ற நிலை தோன்றியிருந்தது.
எனினும் இன்று சீனாவைப் புறந்தள்ளி இலங்கைக்குள் இந்தியா தமது நாடு நலன் சார்ந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றமையை காணமுடிகிறது.
இதற்கு இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு பாரிய நன்மையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்றே கூறமுடியும். இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவதாகக் கூறும் இந்தியா, இலங்கையுடன் பாரிய முதலீடுகளுக்கான திட்டங்களில் கை வைத்துள்ளது.
திருகோணமலை எரிபொருள் குதம், சம்பூர் சூரிய ஒளி மின்சாரத்திட்டம், மன்னாரில் காற்றாலை மின்சார திட்டம், கொழும்பு துறைமுகத்தில் அதானி குழுமத்தின் முதலீட்டுத் திட்டம், பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி அதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கையின் வடக்குக்கும் இடையிலான நேரடி வர்த்தகத்தைக் கூர்மைப்படுத்தல் போன்ற திட்டங்களை மோடியின் தலைமையில் இந்தியா வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே பிரதமர் இந்திரா காந்தி காலத்திலேயே திட்டமிடப்பட்ட “இராமர் பாலம்” என்ற சொல்லக்கூடிய தமிழகம் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான தரைவழிப்பாதை திட்டமும் எதிர்காலத்தில் இந்தியாவினால் இலங்கையின் ஒப்புதலுடன் செயற்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கான திட்டத்தை ஏற்கனவே இந்திய அமைச்சரும் நரேந்திர மோடிக்கு நெருங்கியவருமான கட்காரி 2015ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கிக்குப் பரிந்துரைத்தார். தற்போது வரையில் அது, உத்தியோகப்பூர்வமாக உருவம் பெறவில்லை.
எனினும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அந்த திட்டமும் இந்தியாவினால் வெற்றிகொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பிரதமரான இந்திரா காந்தியின் கனவை பாரதீய ஜனதாக்கட்சியின் பிரதமரான நரேந்திர மோடி, தமது காலத்துக்குள் நிறைவேற்றிக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இந்தியாவின் தேசிய கொள்கை தொடர்பாகக் கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் சிறந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளமுடியும். சரி, இறுதியாக இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பான நாடு என்ற அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் காண எந்தளவு உந்துதலை வழங்கும் என்பதைப் பார்க்கவேண்டியுள்ளது.
இதன்போது இந்தியா, இலங்கைத் தமிழர்களின் முழுமையான அபிலாஷைகளையும் பெற்றுக்கொடுத்துவிடும் என்பதை நம்பமுடியாது. எனினும் இந்தியாவின் மாநிலங்களின் அடிப்படையில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஏனெனில் இலங்கையில் தமிழர்களைக் கவனிக்கவேண்டிய இந்தியா, முன்னரை போன்று சிங்களவர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புக்கு இடம் கொடுக்கவும் தயாராக இல்லை என்பதைக் கூறமுடியும். இது இந்தியாவின் நீண்ட கால நலனுக்கு உதவும் என்பதை நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கம் உணர்ந்தே செயற்படும் என்று கூறமுடியும்.
1987ஆம் விட்ட தவறை இந்தியா இந்த விடயத்தில் நிச்சயம் பரிசீலிக்கும்.. அத்துடன் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்டதாக மார்தட்டும் ராஜபக்ச கடும்போக்கு அரசாங்கத்தின் மூலமாகவே இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா விரும்பும் என்பது யதார்த்தம்.
ஏனெனில் தற்போதைய நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசாங்கம், 69 லட்சம் சிங்கள வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் தமது நாட்டின் நேரடி தலையீடு இல்லாமல், சிங்கள மக்களின் ஒப்புதலுடனேயே தமிழர்களுக்கான தீர்வு கிடைத்தது என்பதையும் இந்தியாவினால் சர்வதேசத்துக்கும் சிங்கள மக்களுக்கும் சுட்டிக்காட்டமுடியும்.