அனல் பறக்கும் ஏலம்..! பல கோடிகளை கொட்டி மந்தனாவை ஏலம் எடுத்த ஆர்சிபி
மும்பையில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில், இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இதன்மூலம், ஸ்மிருதி மிகவும் விலை உயர்ந்த WPL வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே மகளிருக்கான ஐபிஎல் தொடர் இந்தாண்டு முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மார்ச் 4ம் திகதி முதல் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதற்கான வீராங்கனைகள் ஏலம் நடந்துள்ளது.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கிய ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்கியுள்ளன.
இதன்போது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. இவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக அவரே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவரை தவிர்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீக் கார்ட்னரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கும், இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லஸ்டோனை ரூ. 1.80 கோடிக்கு யு.பி. வாரியர்ஸ் அணியும், ஆஸ்திரேலிய வீராங்கனை எலீஸ் பெரியை ரூ. 1.70 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.