இந்திய - இலங்கை கடற்றொழில் பிரச்சினையை அரசியலாக்க கூடாது: இளங்குமரன் எம்.பி
இந்திய கடற்றொழில் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது, இரு நாட்டு கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதை நிறுத்துவதற்கு தாங்கள் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக இந்திய கடற்றொழில் பிரதிநிதிகள் தனக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இந்திய கடல் வளம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கடல் வளத்தை பாதுகாக்கும் அதேநோக்கில், இந்தியாவின் கடல் வளத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இந்திய அரசியல்வாதிகள் இந்திய இலங்கை கடற்றொழில் பிரச்சினைகளை அரசியல்மயப்படுத்தி அரசியலாக்க முற்படுகின்றார்கள்.எனவே, இந்திய அரசியல்வாதிகள் இந்திய கடற்றொழிலாளர்களின் பக்கம் நின்று அந்த கடற்றொழிலாளர்களுக்கு உரிய முறையிலான திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் இலங்கையின் எல்லைக்குள் அவர்கள் வரமாட்டார்கள். எங்களின் கடல் வளமும், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றகரமாக அமையும்.
எனவே, இந்த கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் எங்களது கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலம் இதற்கான ஒரு சுமூகமான தீர்வை பெற்றுக் கொள்ளமுடியும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




