அதானி குழுமத்துக்கு இலங்கையின் எரிசக்தி திட்டங்களை வழங்குக! மோடி அழுத்தம் - வெளிவரும் தகவல்கள்
இந்திய பிரதமர் அழுத்தம்
எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக, ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தார் என்று இலங்கை மின்சார சபைத் தலைவர் இலங்கையின் நாடாளுமன்ற கோப் குழுவிடம் தெரிவித்தார்.
கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் மீதான விசாரணை (கோப்)குழுவில் முன்னிலையான, மின்சாரசபையின் தலைவர், 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தம்மை வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
மின்சார சபைக்கு சம்பந்தம் இல்லை
எனினும் இது தமக்கும் அல்லது மின்சார சபைக்கும் சம்பந்தமான விடயம் அல்ல, இது முதலீட்டுச் சபைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தாம் ஜனாதிபதியிடம் கூறியதாக மின்சார சபையின் தலைவர் கோப் குழுவிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் தாம் இது தொடர்பில் திறைசேரி செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்ததாகவும், அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் இது தொடர்பில் ஆராயுமாறும் தாம் அதில் கேட்டுக்கொண்டதாகவும் மின்சாரசபையின் தலைவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த உடன்படிக்கை, அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற அடிப்படையிலான ஒப்பந்தம் என்பதால், முறையாக கோரப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
எதிர்கட்சி குற்றச்சாட்டு
அதானி குழுமத்தின் பங்களிப்புடன் வடக்கு கரையோரத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான, அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறையாக கோரப்படாத உடன்படிக்கையே, 1989 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் இலங்கையின் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
அத்துடன், 10 மெகாவாட் திறனுக்கு அப்பாற்பட்ட திட்டங்களை கேள்விப்பத்திர முறையில் செயற்படுத்தவேண்டும் என்றும் எதிர்கட்சி கோரியது.
எனினும் இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று, பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு! - கௌதம் அதானி வெளியிட்ட தகவல்