இந்திய விமானங்கள் யாழில் தரையிறங்க தயார் இல்லை! பகிரங்க குற்றச்சாட்டு
யாழ் - பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்கு நிலையில் இல்லாதமை குறித்து கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழில் இந்திய விமானங்கள் தரையிறங்க தயார் இல்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் சர்வதேச விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வரத் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது. இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலயே விமான நிலையம் இயங்காத நிலையில் காணப்படுகிறது என்றார்.
ஒரே இரவில் யாழ் சர்வதேச விமான நிலையத்தை இயங்க வைக்க முடியும்
அதன் போது, யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்டவை தெற்கில் உள்ள விமான நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன எனக் கேட்டபோது, அது முற்றிலும் தவறான தகவல். யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதுவும் எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.
இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை பலாலியில் தரை இறக்க தயார் எனில், ஒரே இரவில் யாழ் சர்வதேச விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் என மேலும் தெரிவித்தார்.