இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கம்
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
#WATCH | Tamil Nadu: Union Home Minister Amit Shah says, "The massacre of Tamils took place in Sri Lanka during the rule of this Congress-UPA. DMK and Congress are responsible for the plight of Tamil fishermen during their rule..." pic.twitter.com/uUuaQwFkBV
— ANI (@ANI) July 28, 2023
இந்தியாவின் முக்கிய அமைச்சரின் கருத்து
இதில் அமித்ஷா பயன்படுத்திய வார்த்தை நேரடியாக இனப்படுகொலை என்ற அர்த்தத்தை தருகிறதா என நோக்கும் போது “நரசங்கார” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும், அதன் முதல் நிலை அர்த்தம் பாரிய மனிதப் படுகொலை என்றும் அதனை இனப்படுகொலை என்று குறிப்பிட முடியும் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேசமயம் அமைச்சரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சர் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என தெரிவித்துள்ளமை சிங்களத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டியதை வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை
எனினும், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸும் திமுகவும் காரணம் என்று பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்கின்றது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அமித்ஷா இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தின் ஒரு பகுதியே அதுவென்று குறிப்பிடுகின்றனர்.
1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார்.
1983 ஜூலைப் படுகொலைகளை எதிர்த்து ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பின்வருமாறு உரையாற்றினார், இலங்கைத் தீவில் நடப்பது என்ன? அது இனப்படுகொலை தவிர வேறு எதுவுமில்லை ஒரு இந்திய தலைவர் அவ்வாறு குறிப்பிட்டமை அதுதான் முதல் தடவை.
அதற்குப் பின் எந்த ஒரு இந்தியத் தலைவரும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. இந்திரா காந்தி அவ்வாறு கூறிச் சரியாக 40 ஆண்டுகளின் பின் இந்திய உள்துறை அமைச்சர் இப்பொழுது அதை இனப்படுகொலை என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |