சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய இந்தியருக்கு மரண தண்டனை
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கிஷோர் குமார் ரகுவான் (வயது 41) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சுமார் 900 கிராமுக்கு அதிகமான தூள் போதைப்பொருள் அடங்கிய பையை விநியோகிக்க சீன வம்சாவளியை சேர்ந்த பங் அஹ் கியாங் (61) என்பவரிடம் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக கியாங், கிஷோர் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. அதன்படி இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்ற போது விசாரணையின் போது, தான் எடுத்துவந்தது போதைப்பொருள் என தனக்கு தெரியாது எனவும், அதை கற்கள் என கூறி அதை உரியவரிடம் சேர்க்கும்படி தன்னிடம் கூறப்பட்டதாகவும் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி கியாங், கிஷோர் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து இந்த வழக்கில் கிஷோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளதுடன்,கியாங்குக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சட்டத்தை பொறுத்தவரை, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் அளவு கடத்தப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தைமை குறிப்பிடத்தக்கது.



