இந்திய வீட்டுத் திட்டம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர்
இந்தியாவின் (India) நிதியுதவியுடன் நடத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி, இலங்கையின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Ja), இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிற்சங்கம் ஒன்று, இந்திய மானிய வீடுகளின் பயனாளிகளாக தங்களின் உறுப்பினர்களை தெரிவு செய்யுமாறு தோட்ட அத்தியட்சகர்களை வற்புறுத்துவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன் வீடமைப்பு திட்ட நடைமுறையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட்ட நிறுவனங்களுக்கு பதிலாக இந்த முறை இலங்கையின் அரச நிறுவனங்கள், தொழிற்சங்க உந்துதலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்திருந்தது.
மதிப்பீட்டு முடிவுகள்
இந்த ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகர் ஜா வெளியிட்ட அறிக்கையில், வீடமைப்பு தொடர்பில் ஏலங்கள் அனைத்து தரப்பினரின் முன்னிலையிலும் திறக்கப்பட்டு, மதிப்பீட்டு முடிவுகள் முறையாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தொழில்நுட்ப மதிப்பீட்டு முடிவுகள், ஒவ்வொரு நிறுவனங்களும் வெவ்வேறு மதிப்பீட்டு அளவுருக்களுடன் பெறப்பட்ட மதிப்பெண்களை தெளிவாக விபரிக்கின்றன. எனவே, இதில் முரண்பாடுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வீடமைப்புத்திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடத் தெரிவு போன்ற திட்டங்களின் சில அம்சங்கள் இலங்கை அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை அதிகாரிகளிடமிருந்து பயனாளிகளின் பட்டியலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்னும் பெறவில்லை. அத்துடன் பயனாளிகளின் பட்டியலில், பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளை உறுதிசெய்ய, செயல்படுத்தும் நிறுவனங்கள் இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு உதவுவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா...! மீண்டும் கூடவிருக்கும் நிர்ணய சபை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




