இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது! படகும் பறிமுதல்
மன்னாருக்கு வடக்கே இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.
அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடிப்படகுகள்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பல இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை வடமத்திய கடற்படை கட்டளையினர் கண்காணித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்தப் படகுகளை இலங்கை எல்லைக்கு அப்பால் விரட்டியடிப்பதற்காகக் கடற்படை கப்பல்கள் மூலம் விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஏனைய படகுகள் தப்பிச் சென்ற நிலையில், தொடர்ந்து இலங்கை எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு படகைக் கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
இந்திய மீனவர்கள் கைது
அதிலிருந்த 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது மீன்பிடிப் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட மீன்வளப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.