வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர் 12 பேரையும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகை கைப்பற்றியதுடன் அதிலிருந்த 12 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த கடற்றொழிலாளர் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரால்
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில், 12
கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14.10.2023) சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப இதுவே காரணம்
தலைமன்னார்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 டோலர் படகுகளில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் நேற்று (14.10.2023) சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் விசாரணை
கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த 15 இந்திய கடற்றொழிலாளர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் தலை மன்னார் பொலிஸார் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.