சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய சதி : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்
அமெரிக்க குடியுரிமையைக் கொண்ட சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை { Gurpatwant Singh}, அமெரிக்க மண்ணில் வைத்து கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியர் ஒருவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிகில் குப்தா (Nikhil Gupta) என்ற இந்தியரே தற்போது அமெரிக்காவின் புரூக்ளினில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீக்கிய பிரிவினைவாதி
சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குப்தா, அமெரிக்க அரசின் வேண்டுகோளின் பேரில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார்.
குப்தா, கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து ப்ராக் சென்றதாகவும், செக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர் இன்று (17) நியூயார்க்கில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கம்
அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான, அவரது மனுவை கடந்த மாதம் செக் நீதிமன்றம் நிராகரித்தது,
இதுவே அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழியை ஏற்படுத்தியது
இந்நிலையில், பன்னூனைக் கொல்ல குப்தா ஒருவரை நியமித்து அவருக்கு 15,000 அமெரிக்க டொலர்களை முற்பணமாக கொடுத்ததாக அமெரிக்க சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதில் பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அரச அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும் இந்த வழக்கில் இந்தியாவுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ள இந்திய அரசாங்கம் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையையும் ஆரம்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |