இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2025 - செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 - செம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருந்த போதும், பாதுகாப்பு காரணங்களால், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் செல்ல அனுமதி அளிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருந்தது.
இந்திய அரசின் நிலைப்பாடு
இந்த விவகாரம் குறித்து இன்று சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தநிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரியான ரந்தீர் ஜெய்ஸ்வால், குறித்த விடயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்த விவகாரத்தில் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அதில், அவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். எனவே, இந்திய அணி, பாகிஸ்தான் செல்வதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஆகையால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மாத்திரம், வேறு நாடுகளில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் முயன்று வருகிறது. எனினும் அதனை பாகிஸ்தானிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எதிர்த்து வருகிறது.
இதன் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்டில், எதிர்வரும் காலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.